மங்களூரு குண்டுவெடிப்பு: ஆபாச வீடியோக்களை அனுப்பி 40 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்த ஷாரிக்


மங்களூரு குண்டுவெடிப்பு: ஆபாச வீடியோக்களை அனுப்பி 40 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்த ஷாரிக்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 11:00 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதி ஷாரிக் ஆபாச வீடியோக்களை இளைஞர்களுக்கு அனுப்பி தனது பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பாணியில் பயிற்சி அளித்ததும் அம்பலமாகி இருக்கிறது.

பெங்களூரு:

பயங்கரவாதி ஷாரிக் ஆபாச வீடியோக்களை இளைஞர்களுக்கு அனுப்பி தனது பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பாணியில் பயிற்சி அளித்ததும் அம்பலமாகி இருக்கிறது.

குக்கர் குண்டுவெடிப்பு

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நாகுரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் ஆட்டோவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதாவது ஒரு பயணி ஆட்டோவில் பயணித்தபோது திடீரென அந்த பயணி எடுத்து வந்த குக்கர் வெடித்து சிதறியது. இதனால் ஆட்டோ டிரைவர் புருசோத்தமும், அந்த பயணியும் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பதையும், அதை கொண்டு வந்தது பயங்கரவாதியான ஷாரிக் என்கிற முகமது ஷாரிக் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் பயங்கரவாதி ஷாரிக்கை கைது செய்தனர்.

வெடிகுண்டு தயாரித்தார்

மேலும் ஷாரிக் வெடிகுண்டுகள் தயாரித்து வந்ததும், அதை வனப்பகுதிகளில் வெடிக்கச் செய்து பரிசோதித்து வந்ததும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி அவர் ஏராளமான இடங்களில் பயங்கரவாத அமைப்பை நிறுவ திட்டமிட்டதும், நாசவேலையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியதும் அம்பலமானது. தற்போது அவர் பலத்த காயங்களுடன் மங்களூருவில் உள்ள பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு அவரை இயக்கியவர்கள் மற்றும் சிலீப்பர் செல்கள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் ஆஸ்பத்திரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதுதவிர ஷாரிக் குறித்து தினமும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

10 செல்போன்கள்

இந்த நிலையில் ஷாரிக் குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அவர் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டு இருந்தார். இதற்காக டிப்ளமோ படித்த அவர், பின்னர் மைசூருவில் ஒரு செல்போன் கடையில் சேர்ந்து செல்போன்களை பழுது பார்க்கவும், அதை நவீன முறையில் கையாளவும் பயிற்சி பெற்றார். இந்த சந்தர்ப்பங்களில் அவர் 10 செல்போன்களை வாங்கி இருக்கிறார். மேலும் பழுது பார்க்க வரும் செல்போன்களில் உள்ள ஆபாச வீடியோக்கள், அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்கள், செல்போன் எண்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொண்டுள்ளார்.

ஆபாச வீடியோக்கள்

அதை பயன்படுத்தி தான் பதிவிறக்கம் செய்த செல்போன் எண்களில் இருந்து குறிப்பிட்ட நபர்களை மட்டும் தேர்வு செய்திருக்கிறார். அவர்களது செல்போன் எண்களுக்கு தன்னிடம் இருந்த 10 செல்போன்களில் இருந்து ஏதாவது ஒரு எண் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அவர்கள் பதில் அனுப்பியது, அவர்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்த ஆபாச வீடியோக்கள் இவரிடம் பழுது பார்க்க வந்த செல்போன்களில் இருந்த வீடியோக்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோக்களை பார்த்து தனது வலையில் விழும் இளைஞர்களை கொஞ்சம், கொஞ்சமாக ஷாரிக் மூளைச்சலவை செய்திருக்கிறார்.

40 இளைஞர்களுக்கு பயிற்சி

பின்னர் அவர்களுக்கு பயங்கரவாத வீடியோக்களை அனுப்பி, அதன்மூலம் தனது அமைப்புக்கு ஆள்சேர்த்து நாசவேலையில் ஈடுபட பயிற்சி அளித்திருக்கிறார். இவ்வாறாக இவர் இதுவரை கர்நாடக கடலோர மாவட்டங்களில் மட்டும் 40 இளைஞர்களிடம் ஆபாச வீடியோக்களை காட்டி நேரில் சந்தித்து மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயிற்சி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் வழங்கப்படுவது போல் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அவர்களை வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று குண்டுகளை வெடிக்க செய்து பயிற்சி அளித்ததும், வெடிகுண்டுகள் தயாரிப்பது, அவற்றை எவ்வாறு வைப்பது, வெடிகுண்டுகளை வைத்துவிட்டு அங்கிருந்து எப்படி தப்பிப்பது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்ததாகவும், அவர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அந்த இளைஞர்கள் கர்நாடக கடலோர மாவட்டங்களில் சிலீப்பர் செல்களாக இருந்து பதுங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

டார்க் வெப் மூலம்...

மேலும் ஷாரிக்கின் செல்போன்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அவை தவிர ஆபாச புகைப்படங்கள், அந்தரங்க வீடியோக்களை போலீசார் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இவர் அந்த இளைஞர்களுக்கு எங்கு வைத்து பயிற்சி அளித்தார் என்பது தெரியவில்லை. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதுமட்டுமின்றி பயங்கரவாதிகள் பயன்படுத்தி வரும் டார்க் வெப் மூலம் ஷாரிக் பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கண்டுபிடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

4 மணி நேரம் விசாரணை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் தலைமையிலான போலீசார் பாதர் முல்லர் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அவர்கள், டாக்டர்களிடம் ஷாரிக்கின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். அப்போது ஷாரிக் குணமடைந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஷாரிக்கிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பின்னர் நேற்று காலையிலும் போலீஸ் கமிஷனர் சசிகுமார் தலைமையில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சுமார் 4 மணி நேரம் ஷாரிக்கிடம் விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்தனர். அப்போது போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றிய தகவல்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.


Next Story