டெல்லியில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது
கென்யாவில் இருந்து டெல்லி வந்த ஐ.எஸ். பயங்கரவாதியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
மங்களூரு:
கென்யாவில் இருந்து டெல்லி வந்த ஐ.எஸ். பயங்கரவாதியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
குக்கர் குண்டு வெடிப்பு
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம், பயங்கரவாதி முகமது ஷாரிக் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறார்கள். பயங்கரவாதி முகமது ஷாரிக்கிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
தற்போது முகமது ஷாரிக் முழுமையாக குணமடைந்த நிலையில், அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை பெற்றுள்ளனர்.
பயங்கரவாதி கைது
இந்த நிலையில் கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்திறங்கிய ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கர்நாடக மாநிலம் சிவமொக்காவை சேர்ந்த அராபத் அலி என்பதும், அவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து சதி திட்டங்கள் தீட்டி வந்ததும் தெரியவந்தது.
அவர் கென்யாவில் இருந்தபடி இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டி வந்துள்ளார். மேலும் முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சேர்த்து வந்துள்ளார். அத்துடன் அவர்களுக்கு பயிற்சி அளித்து பயங்கரவாதியாக மாற்றி வந்தது தெரியவந்தது.
மூளையாக செயல்பட்டார்
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அராபத் அலி மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அவர் தான், கத்ரி மஞ்சுநாதர் கோவிலில் குக்கர் குண்டை வைக்க பயங்கரவாதி முகமது ஷாரிக்கிற்கு அறிவுறுத்தி இருந்தார். அதுமட்டுமின்றி சிவமொக்காவில் துங்கா அணை அருகே நடந்த குண்டுவெடிப்பு பயிற்சியும் இவரது வழிகாட்டுதலின்பேரில் தான் நடந்துள்ளது.
அராபத் அலியின் அறிவுறுத்தலின்பேரில் தான் முகமது ஷாரிக், மாஸ் முனீர் அகமது ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு மங்களூருவில் சுவரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான வாசகங்களை எழுதி உள்ளனர்.
என்.ஐ.ஏ. விசாரணை
அராபத் அலி கென்யாவில் இருந்தாலும் அவரது செயல்பாடுகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கென்யாவில் இருந்து அராபத் அலி டெல்லி வருவதை அறிந்ததும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர்.
கைதான அராபத் அலிக்கு தமிழ்நாடு கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், பயங்கரவாத சதி திட்டங்கள் குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.