பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு- டெல்லி உள்பட 50 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு குறித்து டெல்லி உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புதுடெல்லி,
இந்தியா மற்றும் வெளிநாடுகளை மையமாக கொண்டு பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையே வளர்ந்து வரும் தொடர்பை உடைக்கும் விதமாக டெல்லி, பஞ்சாப், அரியானா ராஜஸ்தான் மாநிலங்களில் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். ஒரு கும்பல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டு உள்ளது குறித்து வெளியான தகவலையடுத்து 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.
சோதனையில் லாரன்ஸ் பிஷ்னோய், நீரஞ் பவானா உள்ளிட்ட பல அமைப்பு மற்றும் கும்பல்களுடன் தொடர்புடையவர்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது சில இடங்களில் துப்பாக்கிகளும், வெடிபொருட்களும் சிக்கியதாக கூறியுள்ளது.
வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டம்
முன்னதாக கடந்த மாதம் 12-ந்தேதி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய இடங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது. இதேபோல் ஆகஸ்டு 26-ந்தேதியும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு டெல்லி போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் என்.ஐ.ஏ. விசாரணையை எடுத்துகொண்டு இந்த சோதனைகளை நடத்தியது.
இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறுகையில், "பல கும்பல்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்தியாவில் இருந்து தப்பித்து பாகிஸ்தான், கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று விட்டனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என தெரிவித்தனர்.