ஜம்மு காஷ்மீர்: ரோந்து பணியின்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் பலி
தேரா கி கலி அருகே தாத்யார் மோர் பகுதியில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஞ்ச்,
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தேரா கி கலி என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயங்கரவாதிகளின் தேடுதல் வேட்டைக்காக ராணுவ வீரர்கள் ஒரு வேன் மற்றும் ஜீப்பில் ரோந்து சென்றனர்.
தேரா கி கலி அருகே தாத்யார் மோர் என்ற இடத்தில் ராணுவத்தினர் சென்றபோது பயங்கரவாதிகள் திடீரென சுற்றிவளைத்து ராணுவ வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 4 ராணுவ வீரர்கள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும் ராணுவ அதிகாரிகள், மற்றும் படையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 3 பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு கூடுதல் ராணுவப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி ராணுவ பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கூறும்போது, பயங்கரவாதிகள் பதுங்கியது பற்றி உளவுத்துறை அளித்த தகவலையடுத்து கூட்டு தேடுதல்வேட்டை நடத்தப்பட்டது. அப்போது பயங்கரவாதிகள் அதிக ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4 பேர் இறந்துள்ளனர். பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.