காஷ்மீரில் பதற்ற நிலை: ஊரடங்கு, இன்டர்நெட் சேவை முடக்கம்
காஷ்மீரில் சமூக ஊடக பதிவுகளால் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து பதர்வா நகரில் ஊரடங்கு பிறப்பித்து, இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டது.
தோடா,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா நகரில் மசூதி ஒன்றில் இருந்து மோதலை தூண்டிவிடும் வகையிலான அறிவிப்பு அடங்கிய வீடியோ ஒன்று வெளியானது. இது சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, போலீசார் உடனடியாக செயல்பட்டனர். பதர்வா காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவானது. இரு தனித்தனி எப்.ஐ.ஆர்.களும் போடப்பட்டு உள்ளன. நிலைமை கட்டுக்குள் உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிஷ்த்வார் மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, சமூக ஊடக பதிவுகளால் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து பதர்வா நகரில் ஊரடங்கு பிறப்பித்து, இன்று காலை முதல் இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீரின் உதம்பூர் மக்களவை தொகுதி எம்.பி.யான மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங், அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதிகாரிகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறார்.
தோடா மாவட்ட கலெக்டர் மற்றும் தோடா மூத்த போலீஸ் சூப்பிரெண்டு ஆகியோரும் பதர்வாவில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என மத்திய மந்திரி சிங் கூறியுள்ளார்.
காஷ்மீரில் சமீப நாட்களாக இந்துக்கள், காஷ்மீரி பண்டிட்டுகள் மீது பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதல் அரசுக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் அமைந்துள்ளது. இதனால், காஷ்மீரி பண்டிட்டுகள் தங்களை பணி இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.