சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட தங்கை - ஆத்திரத்தில் கொன்ற அண்ணன்


சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட தங்கை - ஆத்திரத்தில் கொன்ற அண்ணன்
x

தெலுங்கானாவில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட வேண்டாம் என்று எச்சரித்தும் கேட்காததால் ஆத்திரத்தில் தங்கையை, அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானவில் 22 வயது இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட வேண்டாம் என்று எச்சரித்தும் கேட்காததால் ஆத்திரத்தில் தங்கையைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது.

21 வயதான அந்த பெண் உதவி செவிலியர் படிப்பை முடித்துவிட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். அந்த பெண் தன்னுடைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இது தனக்கு பிடிக்கவில்லை என்று இரண்டு, மூன்று முறை அந்த பெண்ணின் சகோதரன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் மீண்டும் எச்சரித்தும் அந்த பெண், "என் விருப்பப்படி தான் செய்வேன்" என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் உலக்கையால் தனது தங்கையின் தலையில் தாக்கினார். இதையடுத்து படுகாயமடைந்த அந்த பெண்ணை அவரது குடும்ப உறுப்பினர்கள் கம்மத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக வாரங்கலில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை வழக்குப் பதிவு செய்து, அவரது சகோதரரை போலீசார் கைது செய்தனர்.


Next Story