தெலுங்கானா அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிவு வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றம்; 9 பேர் கைது
தெலுங்கானா அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிவு வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பெரும் போராட்டம் வெடித்து உள்ளது. தேர்வு நடைபெறுவதற்கு முன்னரே இளநிலை பொறியியலாளர் மற்றும் நகர திட்டம் சார்ந்த வினாத்தாள் கசிந்து உள்ளது என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, உஸ்மானியா பல்கலை கழகத்தின் முன் மாணவர் தலைவர்கள் ஒன்று திரண்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி உஸ்மானியா பல்கலை கழகத்தின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த கொத்தபள்ளி திருப்பதி செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த தேர்வுக்காக பல மாணவர்கள் காத்திருந்து உள்ளனர்.
உஸ்மானியா பல்கலை கழகத்தில் பல ஆண்டுகளாக மிக கடுமையாக படித்து வந்தனர். ஆனால், சில பணக்காரர்கள் ரூ.5 லட்சத்திற்கும், ரூ.10 லட்சத்திற்கும் தெலுங்கானா அரசு தேர்வாணைய வேலையை பெற்று விடுகிறார்கள்.
தெலுங்கானா அரசு தேர்வாணைய தலைவர் ஜனார்த்தன் ரெட்டி உடனடியாக பதவி விலக வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.
தெலுங்கானா அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கவர்னர் தமிழிசை அறிவுறுத்தலின் கீழ் தெலுங்கானா ராஜ்பவன் தெலுங்கானா அரசு தேர்வாணைய செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.
அதில், விவகாரம் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டு உள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை தொடங்குவதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் அவற்றை தவிர்க்க தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றிய விவரங்களையும் கேட்டு உள்ளது.
அதுபற்றிய விரிவான விசாரணை அறிக்கையை 48 மணிநேரத்தில் அளிக்கும்படியும் கவர்னர் தமிழிசை உத்தரவு பிறப்பித்து உள்ளார். தெலுங்கானா அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிவு வழக்கில் ஐதராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுபற்றி தென்மேற்கு மண்டல டி.சி.பி. கிரண் பிரபாகர் கூறும்போது, தெலுங்கானா அரசு தேர்வாணைய உதவி செயலாளர் (நிர்வாகம்) அளித்த புகாரின் அடிப்படையில் பேகம் பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. உதவி பொறியியலாளர் வினாத்தாள் கசிவு மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேரை கைது செய்து உள்ளனர் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், உதவி பொறியியலாளர் பணிக்கான தேர்வில் வினாத்தாள் கசிவு வழக்கானது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து வழக்கை அவர்கள் விசாரணை மேற்கொள்வார்கள். குற்ற பிரிவு மற்றும் ஐதராபாத் நகர சிறப்பு புலனாய்வு குழுவின் கூடுதல் போலீஸ் கமிஷனர் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை இனி நடைபெறும். அதுபற்றி அவர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.