தெலுங்கானா மாநில புதிய சட்டசபை கட்டிடம்: முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் திறந்துவைத்தார்
தெலுங்கானாவில் ரூ.616 கோடியில் கட்டப்பட்ட புதிய சட்டசபை கட்டிட வளாகத்தை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார்.
ஐதராபாத்,
ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானாவுக்கு புதிய சட்டசபை வளாகம் கட்டப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள உசேன் சாகர் ஏரி அருகே ஏற்கனவே தலைமை செயலகம் அமைந்திருந்த பகுதியிலேயே கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் இதற்கான அடிக்கல்லை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நாட்டினார்.
மாநிலத்தின் அனைத்து துறைகளுக்கான அலுவலகங்களையும் ஒரே கட்டிடத்தில் அடக்கி இந்த புதிய தலைமை செயலகம் ரூ.616 கோடியில் கட்டப்பட்டது. சுமார் 4 ஆண்டுகளாக நடந்த பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று திறப்பு விழா நடத்தப்பட்டது.
'அம்பேத்கர் தெலுங்கானா மாநில தலைமை செயலகம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சட்டசபை வளாகத்தை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்.
மகாத்மா காந்தியின் வழி
நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-
இந்த பிரமாண்டமான தலைமை செயலக வளாகத்தை திறந்து வைப்பது என் வாழ்நாள் பேறாக கருதுகிறேன்.
முந்தைய திட்டக்கமிஷன், தெலுங்கானாவின் 9 மாவட்டங்களை பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்திருந்தது. ஆனால் இப்போது தெலுங்கானாவைப் போல முன்னேறிய கிராமம் எதுவும் இல்லை.
மாநிலத்தின் இந்த வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த அனைத்து துறையினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய அரசியல் சாசன சிற்பி அம்பேத்கரின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு எந்திரமும் உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தெலுங்கானாவின் புதிய தலைமை செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் செய்தியுடனும், மகாத்மா காந்தியின் வழியிலும் தெலுங்கானாவின் பயணம் தொடர்கிறது என்று சந்திரசேகர் ராவ் கூறினார்.
10.51 லட்சம் சதுர அடி
முன்னதாக தலைமை செயலக வளாகத்தில் சிறப்பு யாகங்கள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
10.51 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த சட்டசபை கட்டிடம் 265 அடி உயரம் உடையது. தரைத்தளம், அடித்தளம் உள்பட 6 தளங்களை கொண்ட இந்த கட்டிடம் பாரம்பரிய கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டு உள்ளது.
இந்த தலைமை செயலக வளாகம் 28 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கிறது.
இத்துடன் கட்டப்பட்ட 125 அடி உயர அம்பேத்கர் சிலை கடந்த மாதம் 14-ந்தேதி திறந்து வைக்கப்பட்டது.
மேலும் தெலுங்கானா மாநில பிரிவினை போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்தவர்களுக்காக தியாகிகள் நினைவுச்சின்னமும் கட்டப்பட்டு வருகிறது. இது அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி திறந்து வைக்கப்படுகிறது.