எம்.எல்.ஏ.வுக்கு எதிராக அவதூறு: ஆந்திர முதல்-மந்திரியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா கைது


எம்.எல்.ஏ.வுக்கு எதிராக அவதூறு: ஆந்திர முதல்-மந்திரியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா கைது
x

ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா நேற்று கைது செய்யப்பட்டார்.

ஐதராபாத்,

தெலுங்கானா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்ட ஆந்திர முதல்-மந்திரியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா நேற்று கைது செய்யப்பட்டார்.

பாதயாத்திரை

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.சர்மிளா, தெலுங்கானாவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற பெயரில் கட்சி நடத்தி வரும் அவர், மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இந்த யாத்திரை அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலமுறை யாத்திரை ரத்து செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

எம்.எல்.ஏ. மீது குற்றச்சாட்டு

இந்த நிலையில் மெகபூபாபாத் மாவட்டத்தின் வைதபா பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஒய்.எஸ்.சர்மிளா உரையாற்றினார். அப்போது அவர் மெகபூபாபாத் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பனோத் சங்கர் நாயக்குக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

குறிப்பாக ஊழல், முறைகேடுகள், நில அபகரிப்பு, கொள்ளை போன்ற குற்றசெயல்களில் சங்கர் நாயக் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இது ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி தொண்டர்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியது. எம்.எல்.ஏ. சங்கர் நாயக்கை இழிவுபடுத்தியதாக ஒய்.எஸ்.சர்மிளா மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டார்

அதன்பேரில் சர்மிளா மீது தலித் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மெகபூபாபாத்தில் வைத்து ஒய்.எஸ்.சர்மிளாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டார்.

இதனால் அவரது பாதயாத்திரை ரத்து செய்யப்பட்டது. இது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக கடந்த நவம்பர் மாதமும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் ஒய்.எஸ்.சர்மிளா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story