கரடி தாக்கி வாலிபர் படுகாயம்
கொடாசே கிராமத்தில் கரடி தாக்கி வாலிபர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கார்வார்;
உத்தர கன்னடா மாவட்டம் எல்லாப்புரா தாலுகா கொடாசே கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் சித்தி (வயது 49). முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவரது மகன் சந்ேதாஷ் (26). இவர் அந்த பகுதியில் உள்ள தனது விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு, அருகே உள்ள வனப்பகுதிக்குள் இருந்து கரடி ஒன்று வந்தது. அந்த கரடி, விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த சந்தோசை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ் மயங்கி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து கரடியை வனத்திற்குள் விரட்டினர்.
பின்னர், சந்தோசை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக டவுன் பகுதிக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது வனத்திற்குள் இருந்து சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் மக்களை தாக்கி வருகிறது. அதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.