ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு: மேற்கு வங்காள மந்திரிகள் வீடுகளில் சோதனை - அமலாக்கத்துறை அதிரடி
ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.இந்த விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநில கல்வி மந்திரியாக இருந்தவரும், தற்போதைய வர்த்தக மந்திரியுமான பார்த்தா சட்டர்ஜி, தற்போதைய கல்வி இணை மந்திரி பரேஷ் அதிகாரி ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் மேற்படி மந்திரிகள் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்தவகையில் பார்த்தா சட்டர்ஜியின் கொல்கத்தா வீட்டிலும், கூச்பெகர் மாவட்டத்தில் உள்ள பரேஷ் அதிகாரி வீட்டிலும் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. இதைப்போல மேற்கு வங்காள தொடக்கக்கல்வி வாரிய முன்னாள் தலைவரான மாணிக் பட்டாச்சார்யாவின் வீடு உள்பட பல இடங்களிலும் இந்த சோதனை நடந்தது. மாநில மந்திரிகள் வீட்டில் நடந்த இந்த அமலாக்கத்துறை சோதனை மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.