2024-25-ம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு-மத்திய மந்திரி எல். முருகன்


2024-25-ம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு-மத்திய மந்திரி எல். முருகன்
x

2024-25-ம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அந்தமான் தொழில் வர்த்தக கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் போர்ட் பிளேரில், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று கலந்துரையாடினார். அந்தமான் தொழில் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் சுரேந்தர் பிரகலாத் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மீன்வளம், சுற்றுலா, எளிதில் தொழில் மேற்கொள்வதற்கான அரசின் வழிமுறைகள், அதற்கான அனுமதி தொடர்பான விஷயங்கள் குறித்து எல்.முருகனிடம் தொழில்துறையினர் விளக்கி, பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இதையடுத்து மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

அந்தமான் தொழில் வர்தகத்துறை பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட மந்திரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய தீர்வு காணப்படும். 2024-25-ம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மீன் உள்ளிட்ட கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.43 ஆயிரம் கோடியாக உள்ளது. 2022-23-ம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுத்தமான மீன்கள், குளிர்பதன கிடங்குகள் போன்றவை மூலமே சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யமுடியும். எனவே அதை கருத்தில்கொண்டே பிரதமரின் 'மத்சய சம்படா' திட்டத்தின் கீழ் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story