மேகதாது திட்டத்துக்கு தமிழகம் ஒத்துழைக்க வேண்டும்: டி.கே.சிவக்குமார்
மேகதாது திட்டத்துக்கு தமிழகம் ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியது. இதுகுறித்து கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஹாரங்கியில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழையே நமக்கு ஆதாரம். நான் தமிழகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்.
அது என்னவெனில், காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் தன்னால் இயன்ற அளவில் ஒத்துழைப்பு வழங்கும். எங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தண்ணீரை தமிழகத்திற்கு வழங்குவோம். ஆனால் எங்கள் பங்கு நீரை தேக்கி வைத்துக்கொள்ள தமிழகம் அனுமதிக்க வேண்டும்.
தமிழக மக்களின் நலனை காக்க மேகதாது திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்தால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு தான் அதிக நன்மை கிடைக்கும். இந்த அணையில் சேகரிக்கப்படும் நீர் தமிழகத்திற்கு வழங்கப்படும். இதனால் பெங்களூருவில் உள்ள கன்னடர்கள், தமிழர்கள், தெலுங்கர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும். தொடர்ந்து மழை பெய்தால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவோம். அதை இங்கு பிடித்து வைத்துக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.