'சிறுத்தைப்புலி திட்டம் நாங்கள் போட்டது' காங்கிரஸ் கட்சி சொல்கிறது


சிறுத்தைப்புலி திட்டம் நாங்கள் போட்டது காங்கிரஸ் கட்சி சொல்கிறது
x

Image source: Twitter/Jairamramesh

சிறுத்தைப்புலிகள் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது மன்மோகன் சிங் அரசு என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் அழிந்து போன சிறுத்தைப்புலிகள் இனத்துக்கு புத்துயிரூட்டும் விதத்தில், நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைப்புலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் காட்டுக்குள் விட்டார். ஆனால் இந்த திட்டத்துக்கு விதை போட்டது நாங்கள்தான் என காங்கிரஸ் கட்சி உரிமை கொண்டாடி உள்ளது.

இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- ஆட்சியின் தொடர்ச்சியை பிரதமர் மோடி ஒரு போதும் ஒப்புக்கொண்டதில்லை. 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி நான் கேப்டவுனுக்கு சென்றபோது, இந்த சிறுத்தைப்புலி திட்டம் போடப்பட்டது. இன்று பிரதமரால் திட்டமிடப்பட்ட தமாஷ் தேவையற்றது. தேசிய பிரச்சினைகள் மற்றும் இந்திய ஒற்றுமை யாத்திரை அழுத்தத்தில் இருந்து இது திசை திருப்புவதாகும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "சிறுத்தைப்புலிகள் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது மன்மோகன் சிங் அரசு. அப்போதைய வனம் மற்றும் சுற்றுச்சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ், தென் ஆப்பிரிக்காவில் உள்ள சிறுத்தைப்புலிகள் மையத்துக்கு 2010 ஏப்ரலில் சென்றிருந்தார்" என கூறப்பட்டுள்ளது.


Next Story