நடுக்கடலில் பழுதான சிரியா சரக்கு கப்பல்; 15 மாலுமிகள் பத்திரமாக மீட்பு
மங்களூரு அருகே மலேசியாவில் இருந்து லெபனான் சென்ற சிரியா சரக்கு கப்பல் நடுக்கடலில் பழுதானது. அந்த கப்பலில் இருந்த 15 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மங்களூரு:
சரக்கு கப்பல் பழுது
மலேசியாவில் இருந்து 8 ஆயிரம் டன் சரக்குகளுடன் 'எம்.வி.பிரின்ஸ்' என்ற சிரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் லெபனான் நாட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் சிரியாவை சேர்ந்த 15 மாலுமிகள் பயணித்தனர். அந்த கப்பல் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புதிய மங்களூரு கப்பல் துறைமுகம் அருகே அரபிக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பழுதானது. மேலும் கப்பலுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் புதிய மங்களூரு துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி கேட்டனர். ஆனால் புதிய மங்களூரு துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் புதிய மங்களூரு கப்பல் துறைமுகம் அருகே ஒரு கடல் மைல் தொலைவில் கப்பல் சிறிது, சிறிதாக மூழ்க தொடங்கியது.
15 மாலுமிகள் மீட்பு
இதன்காரணமாக சரக்கு கப்பலில் இருந்த 15 மாலுமிகளும் பரிதவித்தனர்.
இதுபற்றி இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர், 'விக்ரம்', 'அமர்த்தியா' ஆகிய 2 மீட்பு கப்பல்கள் மூலம் அரபிக்கடலுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர், சிரியா சரக்கு கப்பலில் சிக்கி பரிதவித்த சிரிய மாலுமிகள் 15 பேரையும் பத்திரமாக மீட்டு மீட்பு கப்பல்கள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.