வங்காளதேசத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சையது ரெபாத்


வங்காளதேசத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சையது ரெபாத்
x

கோப்புப்படம்

வங்காளதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெறுகிறது.

டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் பங்கேற்று உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. கடந்த 2018 ல் மாணவர்களின் போராட்டம் காரணமாக இந்த முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 30 சதவீத இடஒதுக்கீடு முறை மீண்டும் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் பெரும் போராட்டம் வெடித்தது. இதைத்தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 5ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். உயிருக்கு பயந்து ஷேக் ஹசீனா, வங்காளதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். ஷேக் ஹசீனா மற்றும் அவரது தங்கை ரெஹானாவும் மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இட ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் பதவி விலக வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர். அதன்படி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், வங்காளதேசத்தின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெபாத் அகமது நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமை நீதிபதிக்கு அதிபர் முகமது சஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். பதவியேற்பு விழாவை அமைச்சரவை செயலர் மஹ்பூப் ஹூசைன் நடத்தினார். சையது ரெபாத் வங்காளதேசத்தின் 25-வது தலைமை நீதிபதி ஆவார். இவரது தந்தை சையத் இஷ்டியாக் அகமது நாட்டின் முன்னாள் அட்டார்னி ஜெனரலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story