சுவாதி மாலிவால் வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்


Swati Maliwal case Bibhav Kumar Judicial Custody
x

சுவாதி மாலிவால் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால். இவர் கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக டெல்லி போலீசில் சுவாதி மாலிவால் அளித்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை 8 முறை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை கடந்த 18-ந்தேதி டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் பிபவ் குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், பிபவ் குமாருக்கு வழங்கப்பட்ட போலீஸ் காவல் இன்றோடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து பிபவ் குமாருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி கவுரவ் கோயல் உத்தரவிட்டார்.

இதற்கிடையில் தன் மீதான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், தனக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி டெல்லி ஐகோர்ட்டில் பிபவ் குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான உத்தரவை டெல்லி ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story