நகை வியாபாரியிடம் லஞ்சம் பெற்ற 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடைநீக்கம்
நகை வியாபாரியிடம் லஞ்சம் பெற்ற 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அல்சூர்கேட்:
பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டர்களாக இருப்பவர்கள் தாகூர், ரமேஷ். இவர்கள் கடந்த 3-ந் தேதி அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் நகை வியாபாரி என்பதும், அவர் வியாபாரத்திற்காக நகைகளை எடுத்து சென்றுள்ளார். மேலும், அவரிடம் நகைகளுக்கான ஆவணங்கள் சரியாக இருந்துள்ளது. எனினும், அவர்கள் வியாபாரியை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்றால், தங்களுக்கு லஞ்சம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். பின்னர், அவரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெற்றுக்கொண்டு, அவரை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், அவர்கள் மீது அல்சூர்கேட் துணை போலீஸ் கமிஷனர் தலைமையில் துறை ரீதியான விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.