மாணவர்கள் காப்பி அடிக்க உதவியதாக ஆசிரியர்கள் உள்பட 15 ஊழியர்கள் பணி இடைநீக்கம்
கலபுரகியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவியதாக ஆசிரியர்கள் உள்பட 15 ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கலபுரகி:
கலபுரகியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவியதாக ஆசிரியர்கள் உள்பட 15 ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்கள் காப்பி அடிக்க உதவி
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் வருகிற 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா கொப்பூர் பி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 3-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்றிருந்தது. அப்போது மாணவ, மாணவிகள் புத்தகத்தை வைத்து கொண்டும், ஜெராக்ஸ் பேப்பர்களை வைத்து கொண்டும் காப்பி அடித்து தேர்வை எழுதி இருந்தார்கள்.
கலபுரகி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இஷா பண்ட், மாணவ, மாணவிகள் காப்பி அடித்து தேர்வு எழுதுவதை நேரில் பார்த்து இருந்தார். இதுபற்றி பள்ளி கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு இருந்தது.
15 பேர் பணி இடைநீக்கம்
அதன்பேரில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது தேர்வு மையத்தில் இருந்த அனைத்து மாணவ, மாணவிகளும் காப்பி அடிப்பதற்கு ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், பிற ஊழியர்கள் என அனைவரும் உதவி செய்திருந்ததும், மாணவர்கள் காப்பி அடிக்க அவர்கள் தேவையான உதவிகளை செய்து கொடுத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, கொப்பூர் பி கிராமத்தில் உள்ள தேர்வு மையத்தில் கடந்த 3-ந் தேதி பணியாற்றிய ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், ஊழியர்கள் என 15 பேரை பணி இடைநீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.