சூரினாம், செர்பியா சுற்றுப்பயணம் நிறைவு; டெல்லி திரும்பினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்து சேர்ந்தார்.
புதுடெல்லி,
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவர் சென்ற முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த ஞாயிற்றுக்கிழமை சுரினாம் நாட்டிற்குச் சென்றடைந்தார். அந்நாட்டின் தலைநகரான பராமரிபோவில் உள்ள ஜோஹன் அடால்ஃப் பெங்கல் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சுரினாம் நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சாந்தோகியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான, 'கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார்' விருதை அந்நாட்டு அதிபர் சாந்தோகி வழங்கி கவுரவித்தார். அப்போது பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, 'இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல, இந்திய-சுரினாமியர் சமூகத்தின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்' என தெரிவித்தார்.
சூரிநாம் சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு செர்பியாவுக்குச் சென்றார். செர்பியாவின் காந்திஜீவா சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு திரவுபதி முர்மு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நேற்றைய தினம் செர்பியாவின் பிரதமர் அனா பிரனாபிக், செர்பிய அதிபர் அலெக்சாண்டர் உசிச் ஆகியோரை திரவுபதி முர்மு சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் இருதரப்பு உறவின் முக்கிய நோக்கங்களை பற்றி விவாதித்தனர். இந்த நிலையில் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, செர்பியாவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.