நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x

நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

புதுடெல்லி,

ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக கடந்த மே மாதம் ஆங்கில தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற நபர் இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள், வன்முறை, கொலை சம்பவங்களும் அரங்கேறியது. இந்த விவகாரம் பூதாகாரமானதையடுத்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜக சஸ்பெண்ட் செய்தது.

இதனிடையே, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நுபுர் சர்மா மீது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி, மராட்டியம், மேற்குவங்காளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் , பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை ஏற்க மறுத்தனர். இது போன்ற விஷயங்களில் உத்தரவுகளை பிறப்பிக்கும் போது கோர்ட்டு கவனமாக சிந்திக்க வேண்டும். இது எளிமையாகவும், தீங்கு இல்லாததாகவும் தெரியலாம் ஆனால் தொடர் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மேலும், உத்தரவுகளை வழங்கும்போது கோர்ட்டு கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மனுவைத் திரும்பப் பெற பரிந்துரைக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து மனுதாரர் மனுவை திரும்பப்பெறுவதாக தெரிவித்தார்.


Next Story