பாலியல் தொழில் சட்டபூர்வமானது போலீசார் அதில் தலையிடக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி


பாலியல் தொழில் சட்டபூர்வமானது போலீசார் அதில் தலையிடக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
x

பாலியல் தொழில் சட்டபூர்வமானது போலீசார் அதில் தலையிடக்கூடாது அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

புதுடெல்லி,

விருப்பமுடன் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராக தலையிடவோ அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்று போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. விபச்சாரத்தை ஒரு தொழில் என்றும், பாலியல் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் கண்ணியம் மற்றும் சமமான பாதுகாப்பிற்கு தகுதியானவர்கள் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க 6 உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரிமை உண்டு. வயது மற்றும் ஒப்புதலின் அடிப்படையில் குற்றவியல் சட்டம் அனைத்து வழக்குகளிலும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

பாலியல் தொழிலாளி வயது முதிர்ந்தவர் மற்றும் சம்மதத்துடன் பங்கேற்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தால், போலீசார் தலையிடுவதையோ அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதையோ தவிர்க்க வேண்டும்.

எந்த தொழிலாக இருந்தாலும், அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கு உரிமை உண்டு என்று கூற வேண்டியதில்லை.

பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ, தண்டிக்கவோ, துன்புறுத்தவோ, கூடாது என்றும், தன்னார்வ பாலியல் தொழில் சட்டவிரோதமானது அல்ல, விபச்சார விடுதியை நடத்துவது மட்டுமே சட்டவிரோதமானது என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

பாலியல் தொழிலாளியின் குழந்தை பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளது என்ற காரணத்திற்காக தாயிடமிருந்து பிரிக்கக் கூடாது. மனித ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படை பாதுகாப்பு பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு நீட்டிக்கப்படுகிறது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

மைனர் ஒருவர் விபச்சார விடுதியில் அல்லது பாலியல் தொழிலாளர்களுடன் வாழ்வது கண்டறியப்பட்டால், அந்தக் குழந்தை கடத்தப்பட்டதாகக் கருதக் கூடாது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பாலியல் தொழிலாளர்களுக்கு உடனடி மருத்துவ-சட்ட பராமரிப்பு உட்பட அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும்.

"பாலியல் தொழிலாளர்களிடம் போலீசாரின் அணுகுமுறை பெரும்பாலும் மிருகத்தனமாகவும் வன்முறையாகவும் இருக்கிறது. அவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படாத வர்க்கம் போல் உள்ளது,

பாலியல் தொழிலாளர்களின் கைது, ரெய்டு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் என, ஊடகங்கள் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் எந்த புகைப்படத்தையும் வெளியிடவோ அல்லது ஒளிபரப்பவோ கூடாது" என உத்தரவிட்டு உள்ளது.

மேலும் ஆணுறைகளைப் பயன்படுத்துவதை, பாலியல் தொழிலாளிகளின் குற்றச் சான்றாக காவல்துறை கருதக் கூடாது. மீட்கப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படும் பாலியல் தொழிலாளர்களை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் சீர்திருத்த இல்லங்களுக்கு அனுப்பவும் பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரைகளுக்கு, அடுத்த விசாரணை தேதியான ஜூலை 27 அன்று பதில் அளிக்குமாறு மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டுள்ளது.


Next Story