ஞானவாபி மசூதியில் தடவியல் சோதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஞானவாபி மசூதியில் தடவியல் சோதனை நடத்த இடைக்கால தடை விதித்து உள்ளது.
புதுடெல்லி,
வாரணாசி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இங்கு இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மசூதியில் லிங்க வடிவிலான பொருளின் காலத்தை கண்டுபிடிக்க தடவியல் சோதனை செய்ய அனுமதிக்கக்கோரி இந்து அமைப்புகள் அலகாபாத் ஐகோர்ட்டில் மனு அளித்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது, மசூதி வளாகத்தில் தடவியல் சோதனை மேற்கொள்ள அலகாபாத் ஐகோர்ட்டு அனுமதி அளித்திருந்தது.
இதற்கிடையில் அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவிற்கு தடை கோரி ஞானவாபி மசூதியை மேற்பார்வை செய்துவந்த அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஞானவாபி மசூதி வளாகத்தில் தடவியல் சோதனை நடத்தலாம் என்ற அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உள்ளது.