தி கேரள ஸ்டோரி திரைப்படம்: மே.வங்க அரசு விதித்த தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்
தமிழ்நாட்டில் தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி,
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த 5-ந்தேதி வெளியானது. இந்த திரைப்படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேற்கு வங்காளத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படம் திரையிட தடை விதிப்பதாக அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்தார். இந்த படம் வெறுப்புணர்வையும் வன்முறையையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் படத்தை தடை செய்வதாக அவர் கூறினார்.
இதனை எதிர்த்து படத்தின் தயாரிப்பு குழு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துதது.அந்த மனுவில், திரைப்படத்திற்கு சிபிஎப்சி சான்றிதழ் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், திரைப்படத்துக்கான தடையை விதிக்க சட்டம் ஒழுங்கை மாநில அரசு காரணமாக காட்ட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்த்து. அதேபோல், தமிழ்நாட்டிலும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. அதில், தி கேரள ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்காள அரசு விதித்த தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், " மேற்கு வங்காளத்தில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சிலர் ஒரு விஷயத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக அதனை தடை செய்வீர்களா? பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம். அதை விட்டுவிட்டு அடிப்படை உரிமையை எப்படி பறிக்க முடியும்" என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் படத்திற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என தமிழக அரசு பதிலளித்துள்ளது.