தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்திற்கும், கர்நாடகத்துக்கும் இடையே நிலவும் காவிரி நீர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு காவிரி நதிநீர் ஆணையம் அமைத்துள்ளது. நதிநீர் பங்கீடு விவகாரத்தை இந்த ஆணையமே முடிவு செய்து உத்தரவிட்டு வருகிறது. இதற்கிடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்தது. இதற்கு தடை கோரியும், தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஜி.உமாபதி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஜராகி வழக்கு கடந்து வந்த பாதையை குறிப்பிட்டனர்.

அப்போது நீதிபதிகள், 'நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விட்டதா?' என கேட்டனர். அதற்கு பதில் அளித்த மத்திய அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வசீம் காத்திரி, 'கர்நாடகாவில் அமைந்துள்ள புதிய அரசு இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. இது தொடர்பாக மாநில முதல்-மந்திரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக' தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், 'அதை பற்றி எல்லாம் பேச வேண்டாம். புதிய அரசு என்ன? பழைய அரசு என்ன? அதையெல்லாம் மறந்து விடுங்கள். சுப்ரீம் கோர்ட்டு மே 2-ந் தேதி பிறப்பித்த உத்தரவை வாசியுங்கள்' என கேட்டனர். இதற்கு பதில் அளித்த வக்கீல், தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். ஒரு மாதம்தான் கடந்து விட்டதே, ஆணையம் அமைத்தது தொடர்பான அரசிதழ் அறிவிப்பை தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதிகள் கேட்டனர்.

இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைக்கும் விவகாரத்தில் தேவையான பதிலை அளிக்க மத்திய அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.


Next Story