நேரடி விசாரணைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனு: ஆகஸ்டு 1-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
நேரடி விசாரணையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனு மீது ஆகஸ்டு 1-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது.
புதுடெல்லி,
உத்தரகாண்ட் ஐகோர்ட்டு காணொலி விசாரணையை நிறுத்திவிட்டு வழக்கமான நேரடி விசாரணையை கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு 24-ந்தேதி முதல் தொடங்கியது. இதை எதிர்த்து அகில இந்திய வக்கீல்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் வக்கீல்களும், மனுதாரர்களும், ஊடகவியலாளர்களும், கோர்ட்டுகளின் காணொலி விசாரணையில் பங்கேற்பது அடிப்படை உரிமை என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் முறையிடப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளதே என்றார்.
இதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ஆகஸ்டு 1-ந்தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி, 'அப்படியென்றால் அன்றைய தேதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அதில் தலையிட விரும்பவில்லை' என்று தெரிவித்தார்.