டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு


டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு
x

File image

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நியாயமான விசாரணை செய்கிறதா என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 15ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கவிதா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து ஏப்ரல் 11ம் தேதி, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக கவிதாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து கவிதா மீது கடந்த ஜூன் 6ம் தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்குகளில் ஜாமீன் மறுத்த டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கவிதாவின் ஜாமீன் மனுவுக்கு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் பி.ஆர்.எஸ். தலைவர் கே.கவிதாவின் ஜாமீன் மனு மீதான பதிலை வரும் 22ம் தேதிக்குள் தாக்கல் செய்வதாக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வதான் ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஒரு தலைபட்சமாக நடந்து கொள்ள முடியாது என்றும் ஏற்கனவே பிணையை வழங்க மறுத்த தனி நீதிபதி, தவறான வழிமுறையை கையாண்டிருக்கிறார் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நியாயமான விசாரணை செய்கிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் விசாரணை என்ற பெயரில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதை ஏற்க முடியாது எனக்கூறி கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story