கர்நாடக துணை முதல்-மந்திரி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து -சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு


கர்நாடக துணை முதல்-மந்திரி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து -சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
x

சிவக்குமார் மீதான சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கை ரத்து செய்து நீதிபதிகள், உத்தரவிட்டனர்.

புதுடெல்லி,

கா்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து ரூ.8½ கோடி ரொக்கம் கிடைத்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அவர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு பதிவு செய்தது. மேலும் அவர் மீது சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ வழக்கு தாக்கல் செய்தது.

தன் மீதான சட்டவிரோத பணமரிமாற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சிவக்குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து அவா் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அவரது மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சிவக்குமாரின் மனு மீது இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை நடைபெற்றது. அப்போது சிவக்குமார் மீதான சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கை ரத்து செய்து நீதிபதிகள், உத்தரவிட்டனர்.

அவரது வீட்டில் சிக்கிய பணம், சட்டவிரோத பண பரிமாற்றத்தால் கிடைத்த பணம் என்பதை அமலாக்கத்துறை நிரூபிக்கவில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இதே வழக்கில் சிவக்குமார் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள சிவக்குமார், தனக்கு இன்று மிகப்பெரிய மகிழ்ச்சியான நாள் என்று கூறி தீர்ப்பை வரவேற்றுள்ளார்.


Next Story