பதிவான ஓட்டுகளுடன் 'விவிபேடு'களை சரிபார்க்க கோரும் மனு: தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


பதிவான ஓட்டுகளுடன் விவிபேடுகளை சரிபார்க்க கோரும் மனு: தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x

விவிபேடுகளை சரிபார்க்க கோரும் விவகாரம் தொடர்புடைய மனுவுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தேர்தல்களில் பல புதுமையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் புகுத்தி வருகிறது. குறிப்பாக 'விவிபேடு' என்னும் வாக்களித்ததை உறுதி செய்யும் எந்திரம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஏ.டி.ஆர். என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், தேர்தலில் பதிவான ஓட்டுகளுடன் 'விவிபேடு'களை சரிபார்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் கன்னா, பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் முன்வைத்த வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, 'பதிவான ஓட்டுகளுடன் 'விவிபேடு'களை சரிபார்க்க கோரும் விவகாரம் தொடர்புடைய மனுவுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளுடன் 'விவிபேடு'களை சரிபார்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story