சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம்: ஆம் ஆத்மி கட்சியின் மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்டு
பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. மேயர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் ஆகியோர் போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடைபெற்றது. மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜனதா வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பா.ஜனதா வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கும், பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி வீடியோ வெளியிட்டன.
மேலும், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. அதேசமயம், சண்டிகர் மாநகராட்சி மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த முடிவால் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார், சுப்ரீம் கோர்ட்டை நாடினார். தேர்தல் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என ஐகோர்ட்டு அளித்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், கவுன்சிலர் குல்தீப் குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி, வழக்கை விசாரணைக்கு பட்டியலிடவேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதற்கு ஆதாரமாக ஒரு வீடியோவையும் சமர்ப்பித்தார்.
இதையடுத்து, மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், 3 வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு பட்டியலிடுவதாக தெரிவித்தனர்.