நல்ல தரமான பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது காலத்தின் தேவை - மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேச்சு
நல்ல தரமான பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது காலத்தின் தேவை என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற ஜவுளி ஆலோசனைக் குழுவுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது:-
இந்திய பருத்திக்கு முத்திரை வழங்கப்படுவதற்கான சிறந்த தருணம் இது. இந்திய பருத்தி கஸ்தூரிக்கு முத்திரை மற்றும் சான்றளிக்கும் வகையில் தொழில்துறை முன்னணியில் இருந்து செயல்பட வேண்டியது அவசியம். கஸ்தூரி பிராண்டட் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஈர்ப்பை உருவாக்க வேண்டும்.
இந்திய பருத்தி இழைகளின் தரம் மிக முக்கியமானது. இந்திய தர நிர்ணய அமைப்பு சட்டம் 2016 இன் கீழ் பருத்தியின் தரத்தை தொழில்நுட்ப அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும். கஸ்தூரி பருத்தியின் தரம், இருப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் ஒருங்கிணந்து பணியாற்றும் தொழில்துறை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.
பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, நல்ல தரமான பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவது காலத்தின் தேவை. போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிலிருந்து சில உறுதியான நடவடிக்கைகள் தேவை. பருத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்க புதுமையான வேளாண் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.