வானில் அதிசய நிகழ்வு... சூப்பர் புளூ மூன், சனி கோள் ஒன்றாக ஜொலிப்பு


வானில் அதிசய நிகழ்வு... சூப்பர் புளூ மூன், சனி கோள் ஒன்றாக ஜொலிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2023 10:42 PM IST (Updated: 31 Aug 2023 6:36 AM IST)
t-max-icont-min-icon

அசாம் மற்றும் வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வானில் சூப்பர் புளூ மூன் இன்றிரவு தெரிந்தது.

புதுடெல்லி,

வானில் தோன்றும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான சூப்பர் புளூ மூன் இன்றிரவு தெரியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர். இதன்படி, இன்றிரவு சூப்பர் புளூ மூன் தெரிந்தது.

நாட்டின் அசாம் மற்றும் வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வானில் சூப்பர் புளூ மூன் தெரிந்தது. இது புளூ மூன் என அழைக்கப்பட்டாலும், நீல நிறத்தில் காணப்படாது. ஒரே மாதத்தில் 2-வது பவுர்ணமி வரும்போது அதனை புளூ மூன் என அழைக்கிறார்கள்.

இந்த மாதத்தின் புளூ மூன் ஆனது, நடப்பு ஆண்டின் முதல் சூப்பர் புளூ மூன் ஆகும். இந்த நிலையின்போது, பூமிக்கு 3,57,344 கி.மீ. என்ற அளவில் நிலவு நெருங்கிய தொலைவில் இருக்கும். நமது பூமியை சுற்றி வரும் நிலவானது, பூமியை நெருங்கிய புள்ளியை அடையும்போது, அது சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது.

இதனால், பிற காலகட்டங்களில் காணப்படும் நிலவை விட அளவில் பெரிய, முழு அளவில் மற்றும் பிரகாசத்துடன் இந்த நாட்களில் நிலவு காணப்படும். 2-வது முழு நிலவு (பவுர்ணமி) மற்றும் பூமியை நெருங்கிய நிலை என இரு அரிய நிகழ்வுகள் ஒன்றாக நிகழ்கின்றன.

இதனை தொடர்ந்து, இந்த நிகழ்வு சூப்பர் புளூ மூன் என கூறப்படுகிறது. ஒரு பவுர்ணமி நாளில் இருக்கும் நிலவை விட 14 சதவீதம் பெரிய அளவில் இந்த நாட்களில் நிலவு காணப்படும்.

ஒவ்வோர் ஆண்டும் புளூ மூன் அல்லது சூப்பர் மூனை காண்பது பொதுவான ஒன்று என்றபோதும், இரண்டும் சேர்ந்த நிகழ்வான சூப்பர் புளூ மூன் ஆனது, தசாப்தத்தில் ஒரு முறையே நிகழ கூடும்.

இந்த சூப்பர் புளூ மூன் அடுத்து 2037-ம் ஆண்டு ஜனவரி வரை நிகழாது என்றும் கூறப்படுகிறது. இதுபோக, நிலவின் மேல் பகுதியில் இருந்து 5 டிகிரி என்ற அளவில் மேலே சனி கோளையும் காண முடியும்.


Next Story