கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு... பொதுமக்கள் அதிர்ச்சி


கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு... பொதுமக்கள் அதிர்ச்சி
x

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் கர்நாடக அரசு விற்பனை வரியை உயர்த்தியதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

பெங்களூரு,

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளான 5 இலவச திட்டங்களை அரசு அமல்படுத்தியுள்ளது. அதாவது வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், அரசு பஸ்களில் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு இலவச பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஆயிரம் ஊக்கத்தொகை, வேலையில்லாத பட்டதாரிகள் (தலா ரூ.3,000) மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு (தலா ரூ.1,500) உதவித் தொகை, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது.

இந்த இலவச திட்டங்களால் கர்நாடக அரசின் கஜானாவை காங்கிரஸ் அரசு காலி செய்துவிட்டதாக எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நிதிச்சுமையால் கர்நாடக அரசு 5 உத்தரவாத திட்டங்களையும் நிறுத்தி விடும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் கர்நாடகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை நேற்று அதிரடியாக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகத்தில் பெட்ரோல் மீதான விற்பனை வரி 25.92 சதவீதமாக இருந்தது. அந்த விற்பனை வரியை நேற்று 29.84 சதவீதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது பெட்ரோல் மீதான விற்பனை வரியை 3.92 சதவீதம் உயர்த்தி உள்ளது.

இதுபோல், டீசல் மீதான விற்பனை வரி 14.34 சதவீதமாக இருந்தது. அந்த விற்பனை வரியை 18.44 சதவீதமாக அரசு அதிகரித்துள்ளது. அதாவது டீசல் மீதான விற்பனை வரி 4.1 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி உயர்வு நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை திடீரென்று மாநில அரசு அதிகரித்துள்ளதால், மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, பெங்களூருவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.84 ஆக இருந்தது. விற்பனை வரி 3.92 சதவீதம் அதிகரித்துள்ளதால், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.3 உயர்ந்து ரூ.102.84 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதுபோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.85.93 ஆக இருந்தது. டீசல் மீதான விற்பனை வரியை 4.1 சதவீதத்திற்கு மாநில அரசு உயர்த்திருப்பதால், ஒரு லிட்டர் டீசல் ரூ.89.43 ஆக உயர்ந்துள்ளது. அதாவது டீசல் லிட்டருக்கு விலை ரூ.3.50 உயர்ந்துள்ளது. மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீரென்று உயர்த்தப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகத்தில் திடீரென்று பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி சித்தராமையா, வணிக வரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது அரசின் இலக்கின்படி வணிக வரி வசூல் ஆகவில்லை என்பதை முதல்-மந்திரி சித்தராமையாவின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதையடுத்து, மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான விலையை உயர்த்துவது குறித்து அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசித்து இருந்தார். அப்போது அதிகாரிகளும் அரசின் வணிக வரி இலக்கை அடைய பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதே சரியாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. ஏனெனில் அரசின் கஜானாவை நிரப்ப வேறு வழியில்லை என்பதையும் முதல்-மந்திரிக்கு, அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் கர்நாடகத்தில் விற்பனை வரியை உயர்த்தி பெட்ரோல், டீசல் விலையை கர்நாடக அரசு உயர்த்தி இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வால் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரும் நாட்களில் உயரும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story