சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கு: மறுதேர்வு தேதியை அரசு அறிவிக்க கூடாது; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் அரசு மறுதேர்வு தேதியை அறிவிக்க கூடாது என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு;
அரசுக்கு உத்தரவிட கோரி...
கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு நடைபெற்ற தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் முறைகேடு நடந்ததால் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்து உள்ளது. இதனை எதிர்த்து தேர்வு எழுதிய சிலர் கர்நாடக நிர்வாக தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை தள்ளுபடி செய்த ஆணையம், கர்நாடக அரசின் அறிவிப்பை உறுதி செய்தது. இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு நடத்தும் முடிவை கைவிட அரசுக்கு உத்தரவிட கோரி, கர்நாடக ஐகோர்ட்டில் சில தேர்வர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி நரேந்தர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடந்து வருகிறது.
தேதியை அறிவிக்க கூடாது
இந்த நிலையில் நேற்று முன்தினம் மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், 'சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் 32 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த 32 பேர் செய்த தவறுக்காக மறுதேர்வு நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மறுதேர்வு மூலம் நூற்றுக்கணக்கானோரின் எதிர்காலம் பாதிக்கப்படும். மேலும் வயது வரம்பு அடிப்படையில் அவர்களுக்கு வேலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும்' என்று வாதிட்டனர்.
அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணி கூறுகையில், 'இந்த வழக்கில் பல அதிகாரிகள், இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர். இந்த தேர்வு சட்டவிரோதமாக நடந்து உள்ளதால் அரசு இந்த வழக்கை தீவிரமாக எடுத்து கொண்டு உள்ளது. அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று மறுதேர்வு நடத்த அரசு முடிவு செய்து உள்ளது' என்று கூறினார்.
மறுதேர்வு தேதி
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நரேந்தர், நீதிமன்றத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரையில் மறுதேர்வு தேதியை அரசு அறிவிக்க கூடாது என்று கூறினார். மேலும் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.