4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்- யு.ஜி.சி


4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்- யு.ஜி.சி
x

கோப்பு படம் (பிடிஐ)

75 சதவீத மதிப்பெண்களுடன் 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரலாம்

புதுடெல்லி,

கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நெட் (தேசிய தகுதி தேர்வு), செட் (மாநில தகுதி தேர்வு) ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி. ஆய்வுப்படிப்பில் சேர முதுகலை பட்டம் அவசியம்.

'நெட்' தேர்வு எழுதுவதற்கும் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், 4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு இந்த விதிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு தளர்த்தி உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:-

4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரலாம். 'நெட்' தேர்வு எழுதலாம். ஆனால், 4 ஆண்டு படிப்பில் அவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். 'கிரேடு' முறையாக இருந்தால், 75 சதவீத மதிப்பெண்களுக்கு சமமான 'கிரேடு' பெற்றிருக்க வேண்டும்.

4 ஆண்டு பட்டப்படிப்பில் அவர்கள் என்ன பாடம் படித்து இருந்தாலும், பிஎச்.டி. படிப்பில் தங்களுக்கு விருப்பமான பாடத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் (கிரீமி லேயர் அல்லாதவர்கள்), மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story