அரசு பஸ்சை முற்றுகையிட்டு மாணவ அமைப்பினர் போராட்டம்


அரசு பஸ்சை முற்றுகையிட்டு மாணவ அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் பஸ்கள் இயக்க கோரி அரசு பஸ்சை முற்றுகையிட்டு மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் சக்கராயப்பட்டணத்தில் இருந்து பானாவாராவிற்கு குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். எனவே கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் போக்குவரத்து துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று பானாவாரா கிராமத்தில் அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் (ஏ.பி.வி.பி) சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை முற்றுகையிட்ட இந்திய மாணவர்கள் அமைப்பினர் மற்றும் போராட்டக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை அறிந்த போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த அதிகாரிகள் நேரில் வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் சிக்கமகளூருவில் இருந்து சக்கராயப்பட்டணா வழியாக பானவாராவிற்கு கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். இதை கேட்ட போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story