கல்வி கற்க உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு மாணவர்கள் வந்தனர்: கெஜ்ரிவால் பேச்சு
டெல்லியில் ஆசிரியர் தினத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் மாநில ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
புதுடெல்லி,
நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி அன்று ஆசிரியர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் நடப்பு ஆண்டிற்கான தேசிய ஆசிரியர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
இதேபோன்று, டெல்லியில் ஆசிரியர் தினத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் மாநில ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் கெஜ்ரிவால் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார்.
இதன்பின் அவர் கூட்டத்தில் பேசும்போது, முன்பெல்லாம், இந்தியாவில் இருந்தது போன்ற எண்ணற்ற பள்ளி கூடங்கள் இங்கிலாந்தில் இருந்தது இல்லை. கிராமத்தில் ஆசிரியர்களே அதிகம் மதிக்கப்பட்ட மக்களாக இருந்தனர்.
கடந்த 1830-ம் ஆண்டில் பிரிட்டிஷாரும், மெக்காலேவும் எல்லாவற்றையும் அழித்தனர். நம்முடைய நாடு நாளந்தா பல்கலை கழகம் கொண்ட நாடு. உலகம் முழுவதிலும் இருந்து குறிப்பிடும்படியாக ஆசியாவில் உள்ளவர்கள், நம் நாட்டுக்கு கல்விக்காக வருவது வழக்கம்.
உலகின் சிறந்த பல்கலை கழகம் என்றளவில் நம்முடைய நாளந்தா பல்கலை கழகம் இருந்தது. ஆனால் இன்று, நம்முடைய கல்வி முறை அழிந்து விட்டது.
ரஷியா-உக்ரைன் போரின்போது, நம்முடைய குழந்தைகள் உக்ரைனில் பரிதவித்து நின்றனர். அவர்கள் மருத்துவ கல்வி பெறுவதற்காக உக்ரைன் சென்றபோது தவித்து நின்றனர். இதனையறிந்து எனக்கு வேதனை ஏற்பட்டது என பேசியுள்ளார்.