தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் ஈசுவரப்பா நேரில் வலியுறுத்தல்
சிவமொக்கா சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா நேரில் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு:
பதற்றமான சூழல்
சிவமொக்காவில் நேற்று சுதந்திர தின விழாவின்போது வீரசாவர்க்கர் மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்ட விஷயத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்து சமூகத்தை சேர்ந்த ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, சிவமொக்காவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இந்த சந்திப்புக்கு பிறகு ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
துப்பாக்கி சூடு
சிவமொக்காவில் பிரேம்சிங் என்பவர் மீது ரவுடிகள் 6 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக இன்று (நேற்று) அதிகாலையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி சிலரை பிடித்துள்ளனர். இதுவரை 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் 3 பேர் தலைமறைவாகிவிட்டனர்.
சிவமொக்கா மக்கள் அமைதியை விரும்புகிறவர்கள். வெளியூரில் இருந்து வந்த நபர்களால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரியிடம் பேசினேன். இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். தவறு செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக முதல்-மந்திரி மற்றும் போலீஸ் மந்திரியை பாராட்டுகிறேன்.
தக்க பாடம் புகட்டும்
அமைதியை நிலைநாட்ட எங்கள் கட்சியின் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். ரவுடிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அரசு தக்க பாடம் புகட்டும். எஸ்.டி.பி.ஐ. அமைப்பை சேர்ந்தவருக்கு இதில் தொடர்பு உள்ளது. அந்த அமைப்புக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் செயல்பாடு குறித்து மந்திரி மாதுசாமி, சமூக ஆர்வலர் ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் பேசும்போது விமர்சனம் செய்துள்ளார். இது சரியல்ல. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் சாதியவாதிகள் என்பது அனைவருக்கும் தெரியும். நேரு நாட்டை பிளவுபடுத்தினார். அதனால் அவரது படத்தை அரசு தனது விளம்பரத்தில் வெளியிடவில்லை.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.