விசித்திர வழக்கு... காதலி கொலை என சிறைவாசம்; கணவருடன் வாழும் காதலியை 7 ஆண்டுகளுக்கு பின் தேடி, பிடித்த நபர்
ராஜஸ்தானில் காதலி கொலை என சிறைவாசம் அனுபவித்த நபர், 7 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் வாழும் காதலியை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
தவுசா,
உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் ஜான்சி கிராமத்தில் வசித்து வந்த ஆரத்தி என்ற பெண் 7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போயுள்ளார். ஆனால், அவரை காதலரான சோனு சைனி திருமணம் செய்து, கொலை செய்து விட்டார் என ஆரத்தியின் பெற்றோர் குற்றச்சாட்டாக கூறினர்.
போலீசில் அவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து, 2015-ம் ஆண்டில் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தின் ரசீத்பூர் நகரை சேர்ந்த சோனு மற்றும் அவரது நண்பரான உதய்ப்பூரை சேர்ந்த கோபால் சிங் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதுபற்றி சோனு கூறும்போது, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் ஆரத்தியை நாங்கள் தேட தொடங்கினோம்.
ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்திற்கு உட்பட்ட விஷாலா கிராமத்தில் வசிக்கும் நபர், ஜான்சியில் இருந்து ஒரு பெண் எங்கள் கிராமத்திற்கு வந்துள்ளார் என கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த நான், அது ஆரத்தியாக இருக்க கூடும் என எண்ணினேன்.
அதனை நிரூபிக்க காய்கறி விற்பவராகவும், ஒட்டகம் வாங்க வந்திருக்கிறேன் என கூறி அந்த கிராமத்திற்கு சென்றேன். இந்த நிலையில், ஆரத்தியை அடையாளம் கண்டு கொண்டு, அதனை உறுதி செய்தேன்.
இதுபற்றி மெகந்திப்பூர் காவல் நிலையத்தில் கூறியபோது, ஆரத்தியின் அடையாளம் எங்களுக்கு வேண்டும் என கூறி உதவி செய்ய போலீசார் மறுத்து விட்டனர். அடையாள அட்டை எனக்கு கிடைக்கவே 2 ஆண்டுகள் ஆகி விட்டன.
அதன்பின்பே, போலீசார் விசாரணையில் இறங்கினர் என கூறியுள்ளார். மெகந்திப்பூர் காவல் நிலைய அதிகாரிகள் அளித்த தகவலை தொடர்ந்து, உத்தர பிரதேச போலீசார் ஆரத்தியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி அவரை கண்டுபிடித்தனர்.
ஆரத்தி, தனது கணவரான பகவான் சிங் ரேபாரி என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். ஆரத்தியின் பெற்றோரை தொடர்பு கொண்டபோது, கொலை வழக்கு போலியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்தது. ஆரத்தி உயிருடன் இருப்பதும் உறுதியானது.
இவ்வளவு நாளும் ஆரத்தி, தனது பெற்றோருடன் தொடர்பில் இருந்ததும், அவரது கொலைக்காக சோனு மற்றும் கோபால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டது பற்றியும் ஆரத்தி நன்றாக அறிந்து இருந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. ஆரத்தியை மரபணு சோதனைக்கு உட்படுத்தி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோனுவின் கைது நடவடிக்கையால் இவரது தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்து உள்ளார். வழக்கு செலவுக்காக ரூ.20 லட்சம் வரை சோனு செலவிட்டு, கடனாளியாகி உள்ளார். எல்லாவற்றையும் இழந்து விட்டேன் என சோனு வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்து அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதற்கான செய்தி கீழே,
7 ஆண்டு சிறையில் நபர்... கொலையான சிறுமி குடும்பத்துடன் வாழ்வது தெரிந்து அதிர்ச்சி