தோழனிடம் இருந்து பிரிந்த சோகத்தில் சாப்பிட மறுக்கும் நாரை - உ.பி.யில் பரபரக்கும் பறவை அரசியல்


தோழனிடம் இருந்து பிரிந்த சோகத்தில் சாப்பிட மறுக்கும் நாரை - உ.பி.யில் பரபரக்கும் பறவை அரசியல்
x

உயிரியல் பூங்காவில் விடப்பட்ட நாரை உணவு உண்ண மறுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள மண்ட்கா கிராமத்தில், தனது வயலில் கால் முறிந்த நிலையில் கிடந்த நாரையை ஆரிப் என்ற இளைஞர் சிகிச்சை அளித்து காப்பாற்றினார். தனது உயிரை காப்பாற்றிய ஆரிப்பை விட்டு பிரிய மறுத்த நாரை, கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவருடனேயே இணைபிரியாமல் சுற்றி வந்தது.

ஆரிப் தனது பைக்கில் செல்லும் போது அவரை பின்தொடர்ந்து செல்வது, ஒரே தட்டில் சாப்பிடுவது என இவர்களுக்கிடையிலான நட்பு இணையத்தை கலக்கி வந்தது. அதிலும் குறிப்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், நேரடியாகவே சென்று நாரையை பார்வையிட்டார்.

ஆனால் இதன் பின்னர் வனத்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கி, நாரை அதன் இருப்பிடத்தில் தான் வசிக்க வேண்டும் எனக்கூறி, ஓராண்டுக்கும் மேலாக ஆரிப் உடன் சுற்றிவந்த நாரையை கான்பூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து அகிலேஷ் யாதவ், "நான் சந்திக்கச் சென்றேன் என்பதற்காக ஆரிப்பையும், நாரையையும் பிரிப்பதா?" என கேள்வி எழுப்பினார். அன்பை விட மிகப்பெரிய சக்தி உலகத்தில் இல்லை என்பதை பா.ஜ.க. புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் ஆரிப்பிடம் இருந்து பிரிக்கப்பட்ட நாரை, தனது உயிர் நண்பனை பிரிந்த சோகத்தில் 40 மணி நேரத்திற்கும் மேலாக உணவு உண்ண மறுத்து வருவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாரைக்கு உணவாக சுமார் 2 கிலோ மீன்கள் கொடுக்கப்பட்டதாகவும், அதில் மிகச்சிறிய அளவிலான மீன்களை மட்டுமே நாரை உட்கொண்டதாக கூறப்படுகிறது.



Next Story