கர்நாடகாவில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு - ரெயில்வே போலீசார் விசாரணை
கர்நாடகாவில் பெங்களூரு-தார்வாட் செல்லும் வந்தே பாரத் ரெயில் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் மைசூரு-சென்னை இடையே பெங்களூரு வழியாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவின் வடக்கு பகுதியில் உள்ள தார்வாட் நகருடன் மாநில தலைநகர் பெங்களூரை இணைக்கும் இரண்டாவது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 27 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் பெங்களூரு-தார்வாட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது புதன்கிழமை காலை கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை 8.40 மணியளவில் சிக்கமகளரு மாவட்டத்தில் கடூர்-பிரூர் இடையே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கற்கள் வீசப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் சி5 பெட்டியின் இருக்கை எண் 43, 44 மற்றும் இசி-1 பெட்டியின் கழிவறையின் வெளிப்புற கண்ணாடிகள் உடைந்தன. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்புப் படை விசாரணை நடத்தி வருகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருவதாகவும் ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.