பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தகவல்


பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தகவல்
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 3:23 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் சுரேஷ்குமார், பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் நடைபெறும் விபத்துகள் குறித்து கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், "பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் அதிகளவில் விபத்துகள் நடைபெறுகின்றன. நிறைய இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்படவில்லை. ஆங்காங்கே வளைவுகள் உள்ளன.

அங்கு எச்சரிக்கை பலகைகள் இல்லை. விபத்தில் இறப்பவர்களின் குடும்பம் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. ஒரு சில விபத்துகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இறந்த சம்பவமும் நடந்துள்ளது. அதனால் அந்த சாலையில் விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். சுரேஷ்குமாரின் கேள்விக்கு போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு-மைசூரு இடையே விரைவுச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இத்தகைய சாலைகள் நமக்கு தேவை. ஆனால் அந்த சாலையில் நிறைய குறைகள் உள்ளன. வளைவுகளில் தகவல் பலகை வைக்கப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் இத்தகைய எச்சரிக்கை பலகைகள் வைக்கவில்லை. வாகன ஓட்டிகள் பாதை ஒழுங்குமுறையை பின்பற்றுவது இல்லை. அதனால் வாகனங்கள் மிக வேகமாக வருகின்றன.

வளைவுகளில் வண்டியை திருப்புவதால் அது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. அந்த சாலையில் இதுவரை நடைபெற்ற விபத்துகளில் 335 பேர் காயம் அடைந்துள்ளனர். 100 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இந்த விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வரும் வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்கப்படுகிறது. 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு ரோந்து வாகனங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் அந்த சாலையில் விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து ஆய்வு செய்துள்ளனர். அந்த சாலையில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமான தகவல் பலகைகள் வைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு இதுகுறித்து கடிதம் எழுதப்படும்.

பாதசாரிகள் அந்த சாலையை கடக்க சில இடங்களில் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. அந்த வேலியை சிலர் துண்டித்து எடுத்துச் சென்றுள்ளனர். மீண்டும் அந்த இடங்களில் கம்பி வேலி ஏற்படுத்தப்படும். டிராக்டர் போன்ற வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு போக்குவரத்து விதிகள் தெரிவது இல்லை. இத்தகைய விஷயங்களால் தான் விபத்துகள் நடக்கின்றன. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

முன்னதாக பேசிய ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் ஜி.டி.தேவேகவுடா பேசும்போது, "மழை பெய்யும்போது சாலையின் மத்திய பகுதியில் நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் சறுக்கி தடுமாறி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடக்கின்றன. அதனால் சாலையில் மழைநீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


Next Story