அசாமில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு: வாலிபர் கைது
விசாரணையில் வாலிபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
காம்ரூப்,
அசாம் மாநிலத்தில் உள்ள பார்பேட்டா மாவட்டத்தில் உள்ளூர் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மற்றும் அவருடைய அக்கா இருவரும் புத்தகக் கண்காட்சிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் ஒரு வாலிபர், இருவரையும் அணுகினார். அருகில் வந்ததும் அந்த நபர் திடீர் என்று இளம் பெண்ணின் மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிறகு கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அந்த பெண்ணின் உடல் நிலை மோசமாக இருக்கிறது.
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். ஆசிட் வீசிய நபர் தனது வீட்டில் இருப்பதாக வந்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். விசாரணையின்போது, அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் ஆசிட் வீசியிருக்கலாம் என தெரிகிறது.
இதுபோன்ற சம்பவம் சில நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தாரௌலி கிராமத்தில் நடந்தது. 23 வயது இளம்பெண் தனது தாயாருடன் கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வரும் வழியில், மர்ம நபர்கள் அந்த பெண் மீது ஆசிட் வீசிவிட்டு வாகனத்தில் ஏறி தப்பித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் காதலன் உட்பட 2 பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.