மந்திரி பதவியை ஸ்ரீராமுலு ராஜினாமா செய்ய வேண்டும்; பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தல்
வால்மீகி சமூகத்துக்கு துரோகம் செய்த மந்திரி பதவியை ஸ்ரீராமுலு ராஜினாமா செய்ய வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தி உள்ளனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூருவில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வால்மீகி சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி அந்த சமூகத்தை சேர்ந்த மடாதிபதி ஒருவர் நீண்ட நாட்களாக பெங்களூரு சுதந்திர பூங்காவில் நிரந்தரமாக போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால் மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மடாதிபதியிடம் பேச்சுவார்த்தையும் நடத்த முன்வரவில்லை.
இந்த நிலையில் மடாதிபதிக்கு ஆதரவாக வருகிற 9-ந்தேதி (நாளை) பெங்களூரு சுதந்திர பூங்காவில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளோம். மாநிலம் முழுவதும் இருந்தும் பகுஜன் சமாஜ் கட்சியினர் இதில் கலந்துகொள்வார்கள். அங்கேயே வால்மீகி ஜெயந்தி விழா கொண்டாடப்படும். வால்மீகி சமூகத்துக்கு அரசு துரோகம் செய்து வருகிறது. இதற்கு பொறுப்பேற்று அந்த சமூகத்தை சேர்ந்த மந்திரி ஸ்ரீராமுலு, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.