தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இலங்கை வாலிபர்கள் 3 பேர் பெங்களூருவில் கைது
தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த 3 வாலிபர்கள் ெபங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரு:
தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த 3 வாலிபர்கள் ெபங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இலங்கையை சேர்ந்த 3 பேர் கைது
பெங்களூரு நகரில் இலங்கை நாட்டை சேர்ந்த 3 வாலிபர்கள் பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா உத்தரவின் பேரில் இலங்கையை சேர்ந்த கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பெங்களூரு எலகங்கா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜக்கூர் லே-அவுட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அந்த கும்பல் பதுங்கி இருப்பது பற்றிய உறுதியான தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதையடுத்து, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஜெய் பரமேஸ் என்ற ஜாக் என்பவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குடியிருப்பில் சோதனை நடத்திய போலீசார், இலங்கையை சேர்ந்்த 3 பேரையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஜெய் பரமேசையும் கைது செய்தார்கள்.
கொலை வழக்குகளில் தலைமறைவு
விசாரணையில், கைதானவர்கள் இலங்கை நாட்டை சேர்ந்த காசின்குமார், அமில் நுகான், ரங்க பிரசாத் என்று தெரிந்தது. இவர்கள் 3 பேர் மீதும் இலங்கையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் இருப்பது தெரியவந்தது. காசின்குமார் மீது 4 கொலை வழக்குகளும், அமில் நுகான் மீது 5 கொலை வழக்குகளும், ரங்க பிரசாத் மீது 2 கொலை, 2 கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. கூலிப்படையினர் போன்று 3 பேரும் செயல்பட்டு வந்துள்ளனர்.
இந்த கொலை வழக்குகளில் இலங்கை நாட்டு போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்துள்ளனர். அவர்களை அந்நாட்டு போலீசார் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து இருந்ததும் தெரியவந்துள்ளது. ஜலால் என்பவர் கூறியதன் பெயரில் தான் கைதான 3 பேருக்கும், ஜெய் பரமேஷ் தன்னுடைய குடியிருப்பில் அடைக்கலம் கொடுத்திருந்தார். ஜலால் ஏற்கனவே ஓமன் நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
படகு மூலம் சென்னைக்கு...
அதே நேரத்தில் இலங்கையை சேர்ந்த 3 பேரும் கடந்த 21 நாட்களுக்கு முன்பாகவே சட்டவிரோதமாக பெங்களூருவுக்கு வந்து பதுங்கி இருந்துள்ளனர். இதற்காக இலங்கையில் இருந்து கள்ள படகு மூலமாக சென்னைக்கு வந்துள்ளனர். சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக பெங்களூருவுக்கு வந்திருந்தார்கள். அதாவது விசா, பாஸ்போர்ட் இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து 3 பேரும் தங்கி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக கொலை வழக்குகளில் இலங்கை போலீசாரிடம் சிக்காமல் இருக்க இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பெங்களூருவில் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் 3 பேரும் பெங்களூருவில் தங்கி இருக்க வேறு ஏதும் காரணமா?, ஜலாலுடன் சேர்ந்து வேறு குற்றங்களில் ஈடுபட்டார்களா?. விடுதலை புலிகள் இயக்கத்துடன் 3 பேருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரித்து தகவல்களை பெற போலீசார் முடிவு செய்துள்ளனர்.
3 பேரிடமும் தீவிர விசாரணை
இலங்கையை சேர்ந்த 3 பேருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக கைதாகி உள்ள ஜெய் பரமேஸ் மீது எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லையில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், பெங்களூருவில் அவர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதான காசின்குமார், அமில் நுகான், ரங்க பிரசாத்திடம் இருந்து 13 செல்போன்கள், சிலருடைய ஆதார், வாக்காளர் அடையாள அட்டைக்கான நகல்கள், பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த சில புகைப்படங்களை வெட்டி அவர்கள் வைத்திருந்தனர். அவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமாக தங்கியதாக வழக்கு
கைதான 4 பேர் மீதும் எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து , சதி செயலில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையை சேர்ந்த 3 பேரும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.