"பல லட்சம் செலவழித்தாலும் இந்த உற்சாகம் கிடைக்குமா": ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த வீடியோ- விளையாட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி


பல லட்சம் செலவழித்தாலும் இந்த உற்சாகம் கிடைக்குமா: ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த வீடியோ- விளையாட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி
x

ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ள வீடியோ விளையாட்டு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

சென்னை,

நாட்டின் முன்னணி நிறுவனமான மகேந்திர நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ஆனந்த் மகேந்திரா. முன்னணி தொழிலதிபரான இவர் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.

தனித்துவமான விஷயங்கள் மற்றும் தனிமனிதர்களின் சாதனைகளை கண்டறிந்து அதற்கு பாராட்டுகளையும் வெகுமதிகளையும் தொடர்ந்து வழங்கிவருகிறார். இந்த நிலையில் பிபா உலகக் கோப்பை கால்பந்து குறித்து ஆனந்த் மகேந்திரா இன்று பகிர்ந்த டுவீட் மீண்டும் இணையவாசிகளிடம் கவனம் பெற்றுள்ளது.

2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் முதல் முறையாக நடைபெறவுள்ள பிபா உலகக் கோப்பை இது என்பதால் இந்த போட்டியை நடத்த கத்தார் வேகமாக தயாராகி வருகிறது.

இந்த தொடரை எதிர்பார்த்து உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அவர்களை கவரும் வகையிலும் கால்பந்து உலகக்கோப்பையை பிரபலபடுத்தும் நோக்கிலும் அது குறித்த விளம்பரங்களை கத்தார் அரசு மற்றும் பிபா செய்து வருகிறது.

இந்த நிலையில் தான் ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் 2022 பிபா கால்பந்து உலகக் கோப்பை குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தோன்றும் சிறுவர், சிறுமிகள் உண்மையான கால்பந்து போட்டியில் அரங்கேறும் காட்சிகளை தத்துரூபமாக செய்கின்றனர். குறிப்பாக போட்டி தொடங்குவதற்கு முன் எவ்வாறு நடுவர்களுடன் இரு அணி வீரர்களும் ஒருவர் பின் ஒருவராக மைதானத்திற்குள் நுழைவார்களோ அது போலவே அந்த சிறுவர் சிறுமிகளும் ஜெர்சியுடன் மைதானத்திற்கு வருகின்றனர். அதற்கு முன் பிபா உலகக் கோப்பை கால்பந்து கத்தார் 2022 என்ற வாசகம் அடங்கிய கொடியையும் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.

அந்த வீடியோவில் நடுவராக வரும் சிறுமி கால்பந்தை தரையில் வைத்து போட்டியை தொடங்கும்படி கூற பின்னர் அந்த இரு அணியை சேர்ந்த சிறுவர்களும் நடனம் ஆட தொடங்குகின்றனர். வித்தியாசமான முறையில் அனைவரையும் கவரும் வகையில் இந்த வீடியோ உள்ளது.

இதை பகிர்ந்து ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ள குறிப்பில்,"கத்தார் மற்றும் பிபா ஆகியவை உலகக் கோப்பைக்கான விளம்பரங்களுக்காக பல லட்சங்களை செலவழிப்பார்கள். ஆனால் குறைந்த செலவில், மகிழ்ச்சி பொங்க எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ மக்களிடம் ஏற்படுத்தும் உற்சாகத்தை அந்த விளம்பரங்களால் கொடுக்க முடியாது." என பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ள இந்த வீடியோ கால்பந்து ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ வருகிறது.


Next Story