சபாநாயகர் தேர்தல்; காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா அதிரடி உத்தரவு


சபாநாயகர் தேர்தல்; காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா அதிரடி உத்தரவு
x

காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் நாளை அவை நடவடிக்கையில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. இதில், பா.ஜ.க. தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைத்துள்ளது.

இதனிடையே, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக யார் நியமிக்கப்படுவார்? என்பதில் பரபரப்பு நீடித்து வந்தது. பொதுவாக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இணைந்து சுமுகமாக மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், இந்த முறை பாஜக - காங்கிரஸ் இடையே சபாநாயகரை தேர்ந்தெடுப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்க ஆதரவு தரவேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் பா.ஜ.க. கோரிக்கை விடுத்தது. ஆனால், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கினால் சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்க ஆதரவு தருவோம் என காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், சபாநாயகர் பதவிக்கு போட்டியிட பா.ஜ.க. சார்பில் ஓம் பிர்லா வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு எதிராக சபாநாயகர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான கொடிக்குனில் சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட சுரேஷ் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய இருந்த நிலையில் 11.50 மணியளவில் சுரேஷ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். சபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள சூழலில், தன்னுடைய கட்சி எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் கட்சியின் கொறடா சார்பில் அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, அக்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் நாளை காலை 11 மணியளவில் அவை நடவடிக்கையில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

அவை ஒத்தி வைக்கப்படும் வரை தொடர்ந்து அவையில் இருக்க வேண்டும். கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவை காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கே. சுரேஷ் பிறப்பித்து உள்ளார். அவர் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகர் பதவிக்கான வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story