தென்பெண்ணை நீர் விவகாரம்: பேச்சுவார்த்தை குழுவை மத்திய அரசு அமைத்தது


தென்பெண்ணை நீர் விவகாரம்: பேச்சுவார்த்தை குழுவை மத்திய அரசு அமைத்தது
x

பேச்சுவார்த்தை குழுவின் முதலாவது கூட்டம் டெல்லியில் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.

புதுடெல்லி,

தென்பெண்ணை நீர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. அதில் தென்பெண்ணை நீர் விவகாரம் தொடர்பாக நடுவர்மன்றத்தை மத்திய அரசு அமைக்கும் வரை, மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, பேச்சுவார்த்தைக் குழு 3 மாதங்களுக்குள் அறிக்கையை மத்திய அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இதையடுத்து தென்பெண்ணை நீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக் குழுவை மத்திய அரசு அமைந்துள்ளது. பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்களாக தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திர பிரதேசம், புதுச்சேரி ஆகியவற்றின் தலைமை பொறியாளர்களும், மத்திய வேளாண்துறை, சுற்றுச்சூழல் துறை உயர் அதிகாரிகள், தேசிய நீரியியல் நிறுவனத்தின் இயக்குநர் ஆகியோரும், தலைமை பொறியாளர் உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை குழுவின் முதலாவது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணையத்தின் அலுவலகமான சேவா பவனில் வருகிற 21-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story