தென் இந்தியாவின் முதல் 'வந்தேபாரத்' ரெயில்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


தென் இந்தியாவின் முதல் வந்தேபாரத் ரெயில்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Nov 2022 6:45 PM GMT (Updated: 11 Nov 2022 6:48 PM GMT)

சென்னை-மைசூரு இடையே தென்இந்தியாவின் முதல் வந்தேபாரத் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த வந்தேபாரத் ரெயில் புதிய இந்தியாவின் அடையாளம் என பெருமிதத்துடன் அவர் கூறினார்.

பெங்களூரு:

கனகதாசர்-வால்மீகி

பிரதமர் மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று பெங்களூரு வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 9 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவரை கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மேக்ரி சர்க்கிள் பகுதிக்கு வந்தார்.

அங்கிருந்து கார் மூலம் அவர் விதான சவுதா எம்.எல்.ஏ.க்கள் பவனுக்கு காலை 9.45 மணிக்கு வந்தார். அங்கு கனகதாசர் ஜெயந்தியை முன்னிட்டு கனகதாசர் சிலைக்கும், வால்மீகி சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு அவர் அங்கிருந்து கார் மூலம் சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

அங்கு 7-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த சென்னை-மைசூரு இடையேயான 'வந்தேபாரத்' அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்குள் உள்ளே சென்று அதில் உள்ள வசதிகளை பார்வையிட்டார்.

பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி நின்ற பிரதமர் மோடி காலை 10.10 மணிக்கு பச்சை கொடியை அசைத்து, அந்த 'வந்தேபாரத்' ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். ரெயில் புறப்பட்டு சென்ற போது, பிரதமர் மோடி ரெயிலில் பயணித்தவர்களை நோக்கி கையசைத்த படி இருந்தார். தொடக்க விழாவையொட்டி 'வந்தேபாரத்' அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பெங்களூருவில் இருந்து சென்னை சென்டிரல் வரை இயக்கப்பட்டது. இந்த ரெயில் தென் இந்தியாவின் முதல் 'வந்தேபாரத்' எக்ஸ்பிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 8-வது நடைமேடைக்கு வந்த பிரதமர் மோடி, பெங்களூரு- வாரணாசி இடையிலான பாரத் கவுரவ் காசி ஆன்மிக யாத்திரை ரெயில் சேவையை 10.15 மணிக்கு பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற விவகாரம் மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி, இந்து சமய அறநிலையத்துறை மந்திரி சசிகலா ஜோலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி காரில் மேக்ரி சர்க்கிள் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார்.

2-வது விமான முனையம்

அங்கு ரூ.13 ஆயிரம் கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது பசுமை முனையத்தை (கார்டன் டெர்மினல்) நாட்டிற்கு அர்ப்பணித்தார். அரண்மனையை போல் சொகுசு வசதிகளை கொண்ட அந்த முனையம், கர்நாடகத்தின் கலாசாரம் மற்றும் பெங்களூரு நகரின் பெருமையை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் அதிநவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளை கையாளும் திறன் ஆண்டுக்கு 2½ கோடியில் இருந்து 6 கோடியாக அதிகரிக்கும். அந்த முனையத்தில் தொங்கும் பூச்செடி தொட்டிகள், பசுமை சுவர்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

அதைத்தொடர்ந்து அதே விமான நிலைய வளாகத்தில் ரூ.84 கோடியில் நிறுவப்பட்டுள்ள கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது 218 டன் எடை கொண்டது. இது உலகின் மிக உயரமான வெண்கல சிலை என்பதால், அது உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதன் பிறகு அந்த சிலையின் பீடத்தின் மீது பிரதமர் ஏறி ஒரு சொம்பில் இருந்து பாலை எடுத்து ஊற்றி வணங்கினார்.

புதிய இந்தியாவின் அடையாளம்

இதைத்தொடர்ந்து நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

புத்தொழில் துறையில் நாட்டையே பெங்களூரு பிரதிநிதிக்கிறது. 'வந்தேபாரத்' அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வைத்துள்ளேன். இது இந்தியா தேக்க நிலையில் இல்லை என்பதின் அடையாளமாக உள்ளது. இது வெறும் ரெயில் அல்ல. இது புதிய இந்தியாவின் அடையாளம்.

21-வது நூற்றாண்டில் இந்திய ரெயில்வே எப்படி இருக்கிறது என்பதற்கு இது உதாரணம். அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில் இந்திய ரெயில்வே வளர்ச்சி அடைய வைக்க எனது அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 400-க்கும் மேற்பட்ட வந்தேபாரத் ரெயில்கள், விஸ்டோம் பெட்டிகள் போன்றவை இந்திய ரெயில்வேயின் புதிய அடையாளமாக திகழும்.

சரக்கு ரெயில்களுக்கு தனி பாதை அமைத்தால் போக்குவரத்தை அதிகரிக்கும். நேரம் மிச்சமாகும். ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. நகரங்களுக்கு இடையே தொடர்பு வசதிகளை மேம்படுத்தினால் தான் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புறப்பட்டு சென்றார்

பிறகு அதே பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர் பயணித்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. அவர் பெங்களூரு பயணத்தை முடித்து கொண்டு மதியம் 2 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அவரை கவர்னர், முதல்-மந்திரி மற்றும் மத்திய மந்திரிகள் வழியனுப்பி வைத்தனர்.


Next Story