டெல்லியில் தெற்காசிய சிம்பொனி இசைக்குழுவின் கச்சேரி - சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்பு
தெற்காசிய சிம்பொனி இசைக்குழுவினர், வரும் 29-ந்தேதி டெல்லியில் இசைக்கச்சேரி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும், அமெரிக்கா, சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான முன்னாள் தூதருமான நிருபமா ராவ், தெற்காசிய சிம்பொனி அறக்கட்டளையை உருவாக்கினார். தெற்காசிய நாடுகள் இடையே கலாச்சார பரிமாற்றம் மற்றும் அமைதியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அறக்கட்டளை சார்பில் தெற்காசிய சிம்பொனி இசைக்குழுவினர், வரும் 29-ந்தேதி டெல்லியில் இசைக்கச்சேரி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசைக்குழுவில் இங்கிலாந்து, கிரீஸ், ஆப்கானிஸ்தான், ரஷியா, டென்மார்க், தாய்லாந்து, மலேசியா, உஸ்பெகிஸ்தான், சிங்கப்பூர், பூட்டான், இலங்கை உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இசையின் வழியே அமைதி' என்ற கருப்பொருளைக் கொண்டு தெற்காசிய சிம்பொனி இசைக்குழு இயங்குகிறது. கலாச்சார பரிமாற்றத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அமைதியை ஊக்குவிப்பதை இந்த இசைக்கச்சேரி இலக்காக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.